மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் நிர்வாகம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ கலந்து கொண்டு பேசினார்.
ஆனால் மத்திய அமைச்சர் பதவியை பயன்படுத்தி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேரடியாக பாஜகவிற்கு ஆள்சேர்க்கும் வேலையில் ஈடுபட்டதை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பினர் பல்கலைக்கழக வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாணவர்களின் போராட்டத்தை பொருட்படுத்தாத அமைச்சர் பாதுகாவலர்களின் உதவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து பல்கலைக்கழகத்தில் இருந்து அமைச்சர் பாபுல் சுப்ரியோவை வெளியேறிய விடாமல் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மேற்கு வங்க ஆளுநர் பாஜக அமைச்சரை தனது காரில் ஏற்றிக்கொண்டு வெளியேற முயன்றார். ஆளுநரின் காரையும் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாவலர்கள் உதவியுடன் ஆளுநரும் பாஜக அமைச்சரும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர்.